வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அதிக கட்டணத்தை பெற்ற கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் நிர்வாகத்தினருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்க மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்தப்படாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பிரதான நிர்வாகத்தினர் குறித்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் மகனான சனத் குமார அத்துக்கோரல என்பவர் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு வழங்கியதையடுத்து, தேசிய ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் உணவு மருந்து பரிசோதகரினால் குறித்த வைத்தியசாலையின் நிர்வாகத்தினர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதிக்கும் 19 ஆம் திகதிக்கும் இடையில் சுகயீனம் காரணமாக சமரக்கோன் முத்யன்சேலா கொழும்பு நாரயன்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இவரிடம் வைத்தியசாலை நிர்வாகத்தினர் சாதாரண கட்டணத்திற்கு மாறாக அதிகளவிலான தொகையை பெற்றுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கட்டண சீட்டு உள்ளிட்ட 06 ஆவணங்கள் சாட்சிக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.