நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் பகுதிக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரியவருகிறது. அவ்வாறு செய்தால் அங்குள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த தவறை அரசாங்கம் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் உள்ளூராட்சி சபைகளை பிரிப்பதற்கு தீர்மானித்திருந்தது. அதேநேரம் காலிக்கும் நுவரெலியாவுக்கும் மாவட்ட செயலகங்களை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால் அதனை அவர்களால் செயற்படுத்த முடியவில்லை. நாங்கள் அரசாங்கத்தை எடுத்தபோது நான் அமைச்சராக இருந்து ஆரம்பமாக நோர்வூட் பிரதேசத்தில் பிரதேச செயலகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
ஏற்கனவே இதனை இங்கு அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது. அந்த பகுதியில் 2இலட்சத்து 14ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.அங்கு பிரதேச செயலகம் வரவேண்டும் என்று அனைவரதும் கோரிக்கையாக இருந்தது. அதனால் நாங்கள் அதனை அமைக்க நடவடிக்கை எடுத்தாேம்.
ஆனால் அந்த பிரதேச செயலகத்தை ஹட்டன் ரயில் நிலையம் அமைந்திருக்கும் மேல் பகுதிக்கு மாற்றப்போவதாக தற்போது பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது. அவ்வாறு இடம்பெற்றால் அது மிகப்பெரிய தவறாக அமையும். நோர்வூட் பிரதேச செயலகத்தில் போதுமான ஆளணி இல்லாமல் இருப்பதாலே அதனை மாற்ற மாற்ற வேண்டும் என்று தெரிவிப்பதற்கு பிரதான காரணமாகும். இதில் குறித்த பிரதேச செயலகத்தை ஹட்டன் பகுதிக்கு இடமாற்றி, இரண்டரை இலட்சம் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவதா அல்லது பிரதேச செயலகத்துக்கு தேவையான ஆளணியை பெற்றுக்கொடுப்பதா இலகுவான விடயம் என்பதை அரசாங்கம் பார்க்க வேண்டும்.
இந்த விடயம் காரணமாக அந்த பகுதி மக்கள் மிகவும் விரக்தியில் இருக்கின்றனர். மலையக மக்கள் பாரியளவில் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்கள். அதனால் அரசாங்கம் நோர்வூட் பிரதேச செயலகத்தை மாற்றவேண்டும் என்றால் ஆரம்பமாக அந்த பகுதி மக்களிம் கருத்து கேட்க வேண்டும்.
அதேபோன்று அங்குள்ள வியாபாரிகள், சிவில் அமைப்பினர் புத்திஜீவிகளிடம் கேளுங்கள் அப்போது அரசாங்கத்துக்கு உண்மை நிலை தெரியவரும். எனவே அரசாங்கம் இந்த தவறை செய்ய கூடாது என்றே நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.