பங்களாதேஷில் (Bangladesh) நாடு முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டாக்காவில் (dhaka) சுமார் 15 நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இதன்போது இடம்பெறும் வன்முறை சம்பவங்களால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கலவரத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க தொலைக்காட்சிக்கு தீ வைத்ததாகவும், நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சி செய்தி சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நாடு முழுவதும் இணைய இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.
1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் உயிர்நீத்தவர்களை போர்வீரர்களாக கருதி அரசு வேலைகளில் அவர்களின் குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்கும் கோட்டா முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2018 ஆம் ஆண்டில், பங்களாதேஷின் உயர் நீதிமன்றம் இந்த ஒதுக்கீட்டு முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்திருந்த போதும், மேல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதை புதுப்பிக்க அரசாங்கம் முயற்சி எடுத்ததை தொடர்ந்து இந்த மாணவர் போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.