” ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம். உதயகுமார் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், நாட்டு மக்களின் தோழன் சஜித், மலையக மக்களின் காவலன் திகா. எனவே, இரட்டை குழல் துபாக்கிபோல நாட்டையும், மக்களையும் இவ்விருவரும் பாதுகாப்பார்கள் எனவும் உதயா குறிப்பிட்டார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, 13.03.2022 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
” நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. நாட்டின் பொருளாதாரம் மட்டும் அல்ல வீட்டின் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கே அதிக பாதிப்பு. இந்த அரசின் தான்தோன்றித்தனமாக நடவடிக்கை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலை என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில் அடுத்துவரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலையும் 800 ரூபாவால் அதிகரிக்கப்படும். ஏற்கனவே நாட்டு மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். தற்போதைய நிலையில் ஒருவேளை உணவை சாப்பிட்டுதான் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் மேலும் பல நெருக்கடிகள் ஏற்படும்.
சஜித்தும், திகாவும் நல்ல நண்பர்கள். நல்லாட்சியின்போதும் சாதித்துக்காட்டினர். ஏழை மக்களின் தோழன் சஜித், மலையக மக்களின் நண்பன் திகா. இருவரும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் நாட்டையும், மக்களையும் காப்பார்கள். இன்னும் ஒரிரு மாதங்களில் இந்த அரசு விரட்டியடிக்கபடும். சஜித் தலைமையில் நல்லாட்சி மலரும். அப்போது மலையக மக்களுக்கும் விடிவு பிறக்கும்.
15 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். தூங்கும் அரசை தட்டி எழுப்பி, வீட்டுக்கு அனுப்ப தயாராவோம்.” – என்றார்.
க.கிஷாந்தன்