நான், நாகப்பட்டினம் தேசிய ஆரம்பப்பள்ளியில் படித்த காலங்களில் டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சியடையவில்லை. இப்போதிருப்பது போல, எல்.கே.ஜி. யூ.கே.ஜி வகுப்புகளும் அப்போது கிடையாது. ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் படிப்பை தொடங்க வேண்டும். 1962-ம் ஆண்டு நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் சின்னப்பிள்ளைகளுக்கு என்ன சேட்டை, விளையாட்டுத்தனம் இருக்குமோ, அது அனைத்தும் எனக்கும் இருந்தது. ஆனால் கூடவே பயமும் அதிகமாக இருக்கும்.
வழக்கம் போல பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன்! அப்போது இந்தியா மீது சீனா, போர் தொடுக்கப்போகிறது என்ற செய்தி ஊரில் பரவி இருந்தது. ‘அந்த போர் பாதிப்பு நாகப்பட்டினத்துக்கும் ஏற்படும்; இங்கும் குண்டு போடுவார்கள்’ என்று யாரோ ஒருவர் சொன்னது காட்டுத் தீயாகி இருந்தது.
இதைக் கேள்விப்பட்டதும் எனக்குப் பயம். குண்டு போட்டு விட்டால், என்ன செய்வது? என்று பள்ளிக்கூடம் போகமாட்டேன் என வீட்டில் சொல்லிவிட்டேன். ‘இங்கெல்லாம் குண்டு போடமாட்டாங்க, ஸ்கூலுக்குப் போ’ என்று அப்பா- அம்மா எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை.
‘போகவே மாட்டேன்’ என்று தரையில் உருண்டு புரண்டு அழுதேன். என் அப்பாவுடன் சவுரிராஜன் என்பவர் எப்போதும் இருப்பார். அவரை, சவுரி அண்ணன் என்று அழைப்போம். அவருக்கு வேளாங்கண்ணி பக்கம் பெரியதும்பூர் என்ற ஊர். எப்போதும் அப்பாவுடனேயே இருப்பார்.
எனக்கு இரண்டு அக்கா இருந்ததால், நான் பிறக்கும் முன், ‘என் தம்பி பாஸ்கரன் பிறக்கப் போகிறான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர், அவர்தான். நான் பள்ளிக் கூடத்துக்குப் போகமாட்டேன் என்று அழுது அடம்பிடித்த நேரத்தில், சவுரி அண்ணன் என்னை இழுத்துப் போய் பள்ளியில் விட்டு விட்டார்.
பள்ளியில் என் கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டி, ஓரத்தில் நிற்க வைத்து விட்டார்கள். “வீட்டுக்குப் போகக்கூடாது, ஸ்கூல் முடியும் வரை நீ இங்கதான் இருக்கணும்” என்று டீச்சர்கள் சொல்லிவிட்டார்கள். சீனாக்காரன் குண்டு போட்டால் ஏதும் ஆகி விடுமோ? என்ற பயத்திலேயே இருந்தேன். “குண்டு போட்டா போடட்டும், நமக்கு ஒன்றும் ஆகாது” என்று டீச்சர்கள் சொன் னாலும் எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது சக மாணவன் ஒருவன், ‘என்ன பாஸ்கரா?’ என்று அழைத்தபடி, என்னைத் தற்செயலாகத் தொட்டான். இதுதான் சரியான தருணம் என்று தரையில் விழுந்து அழத்தொடங்கினேன். அழுது ‘ஓவர் ஆக் ஷன்’ செய்தால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என நினைத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆவேசமாக அழுதேன். அவர்கள் அசையவில்லை. எனது அந்த முயற்சி தோல்வி யடைந்ததால், பிறகு அழுகையை விட்டுவிட்டு அமர்ந்துவிட்டேன் மாலை வரை. சீனாக்காரன் குண்டு போட வில்லை என்பதால் நிம்மதி.
ஸ்கூல் முடியும்போது டீச்சர்கள் வந்து, “குண்டு போடுவாங்கன்னு சொல்லி அழுதியே, எங்கடா போட்டாங்க?” என்று கேட்டனர். நான் அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றேன். “இங்கலாம் வந்து போடமாட்டான். சீனாக்காரனுக்கு நம்மூருக்கு வழி தெரியாதுடா” என்று அவர்கள் சொன்ன பிறகுதான் என்னுடைய பயம் விலகியது. என்னுடன், ஐசக் சாலமன் நத்தானியல் கிரண்டி, தினகரன், மோகன்தாஸ், கே.ரவி, கண்ணையன், எத்திராஜ், ராஜா, டி.எஸ். செல்வராஜ், பழனிவேல், ராமலிங்கம் ஆகியோர் படித்தார்கள்.
நாங்கள்தான் நண்பர்கள். பள்ளியிலிருந்து இரண்டு தெரு தள்ளி எனக்கு வீடு இருந்ததால், வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச்சென்று விடுவேன். ஆனால், ஐசக் சாலமன் நத்தானியல் கிரண்டிக்கு பள்ளிக்குள்ளேயே வீடு இருந்தது. அவனுடைய அம்மா அதே பள்ளியில் டீச்சராக இருந்தார். ஆனால் அவனும் சாப்பாடு எடுத்து வந்துவிடுவான். “எங்களுக்கு வீடு தள்ளி இருக்கறதால, நாங்க சாப்பாடு எடுத்துட்டு வர்றோம்.
நீ ஏன்டா எடுத்துட்டு வர்றே?” என்று எல்லோரும் கேட்பார்கள். அவன், “நண்பர்களோட சேர்ந்து சாப்பிடறதுக்காக எடுத்துட்டு வர்றேன்” என்பான். எப்போதும் சிரிப்பு, கும்மாளம், அரட்டை என இருந்த பள்ளி நட்பு இப்போதும் என் நினைவுக்கு வந்து சிரிக்க வைக்கும். இதில் சில நண்பர்கள் உயிருடன் இல்லை என்றாலும் மற்றவர்களுடன் தொடர்பில்தான் இருக்கிறேன்.
அப்போது பள்ளிக்கு, மை பேனா கொண்டு செல்வோம். பேனாவில் எழுதுவதற்கு அவ்வளவு ஆசையாக இருக்கும். பேனாவை பிடிப்பதற்காகவே எதையாவது எழுதிக்கொண்டே இருப்பேன். மை தீர்ந்துவிட்டால், “மூணு சொட்டு மை கடன் கொடுடா” என்று நண்பர்களிடம் கேட்போம். அப்போதே கடன் வாங்க கற்றுக் கொடுத்திருக்கிறது பேனா. கடன் வாங்கிய மையை திருப்பிக் கொடுக்காவிட்டால், பெரும் சண்டையாகவும் அது மாறும்.
அதே போல ரப்பருக்கும் சண்டை நடக்கும். வாங்கி சென்றவர்கள் திருப்பித்தரவில்லை என்றால், “வீட்டில் ரப்பர் எங்கே?” என்று கேட்டுவிடுவார்களோ என்ற பயத்திலேயே இருப்போம். பிறகு நண்பர்களிடம் சண்டை போட்டு அது வகுப்பாசிரியர் வரை போன கதையும் உண்டு. மாலையில் பள்ளி முடிந்து விளையாடி விட்டு, ஆறுமணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும்.
வீட்டு வாசலில் வேப்பிலை, மஞ்சள் தூள் போட்டுத் தண்ணீர் வைத்திருப்பார்கள். அதில் கை, கால்களை கழுவிய பிறகுதான் வீட்டுக்குள் வரவேண்டும். பிறகு படிக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஆடா தொடை கம்பையோ, வேறு ஏதாவது கம்பையோ வைத்திருப்பார்கள். அதை வைத்து இழுத்தால் உடலில் வரி வரியாக விழும்.
அதனால் அந்த அடிக்குப் பயந்தே படிக்கிறோமோ இல்லையோ, புத்த கத்தைக் கையில் வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் அமர்ந்து விடுவோம். என் அப்பா, அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருப்பார். அப்போது வீட்டில் இருக்கும் நாளிதழை வாசிக்கச் சொல்வார். செய்தியின் தலைப்பை சத்தமாகப் படித்துவிட்டு, பிறகு செய்திகளை குறைந்த சத்தத்தில் சரியான ‘மாடுலேஷனி’ல் வாசிக்க வேண்டும்.
வாசிக்கும் போது, ல, ழ, ள உள்ளிட்டவற்றை தவறாக உச்சரித்தாலோ, உச்சரிப்பு மாறினாலோ பளீரென்று பிடரியில் அடி விழும். பிறகு தவறாக சொல்லிவிட்டதை உணர்ந்து அதைத் திருத்தி வாசிப்போம். இப்போதும் கூட பேசும்போது ஏதாவது வார்த்தைத் தவறினால், “அப்பா அடித்துவிடுவாரோ?” என்ற பயம் வரும்.
சினிமாவில் நான் பின்னணி குரல் கொடுப்பதற்கும், நடிக்கும் போது சரியான உச்சரிப்பில் பேசுவதற்கும் அப்பா தந்த பயிற்சி தான் பலமாக இருக்கிறது. விடுமுறை நாட்களில் நாகப்பட்டினம் அருகிலுள்ள திருமெய்ஞானம் என்ற ஊரிலிருந்து நாராயணசாமி என்ற அய்யா வந்து எங்களுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்தார். என் சகோதரிகளுடன் நானும் கற்றுக் கொண்டேன். முழுமையாக தொடர முடியவில்லை. அப்போது கற்றுக்கொண்ட சங்கீதம் இப்போது சினிமா பாடல்கள் பாட உதவியாக இருக்கிறது.
HinduTamil