ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச, சுமார் 10 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு நேற்று சென்றிருந்தார்.
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காகவே நாமல் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் இவ்வாறு சு.க. தலைமையகம் சென்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர்தான் மஹிந்த ராஜபக்சவின் தந்தையான டீ.ஏ. ராஜபக்ச. சுதந்திரக் கட்சி ஊடாகவே ராஜபக்சக்களின் அரசியல் பயணம் தென்னிலங்கையில் கோலோச்சியது.
மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுதந்திரக்கட்சி ஊடாகவே நாடாளுமன்றம் பிரவேசித்தனர்.
எனினும், 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர், சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவி மைத்திரி வசம் ஆனது. அதன்பின்னர் ராஜபக்சக்கள் இணைந்து புதிய கட்சியை ஆரம்பித்தனர்.
சுமார் 10 வருடங்கள் அவர்கள் சுதந்திரக்கட்சி தலைமையகம் செல்லவில்லை. இந்நிலையிலேயே நேற்று நாமல் ராஜபக்ச சென்றிருந்தார்.




