பயங்கரவாதத்திற்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்ட மூலத்தின் முதல் வாசிப்பை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் முன்மொழிந்த தண்டனைச் சட்டத் திருத்தம், 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் 39க்கு 16 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, “இனவெறி” நோக்கங்களுக்காகவும், “இஸ்ரேல் அரசுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடனும், அதன் நிலத்தில் யூத மக்களின் மறுமலர்ச்சிக்காகவும்” இஸ்ரேலியர்களைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை பொருந்தும் என்று தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
நடைமுறையில் மரண தண்டனை என்பது யூதர்களைக் கொல்லும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமே பொருந்தும். பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல்களை நடத்தும் யூத கடும்போக்காளர்களுக்கு அல்ல என்பதையே இது அர்த்தப்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையும் குறித்த சட்ட மூலத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
“இஸ்ரேலிய நெசெட் உறுப்பினர்களில் 39 பேரில் பெரும்பான்மையானவர்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மட்டுமே மரண தண்டனையை நீதிமன்றங்கள் விதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சட்ட மூலத்தை முதல் வாசிப்பில் அங்கீகரித்துள்ளனர் என அரசு சாரா அமைப்பின் மூத்த இயக்குனர் எரிகா குவேரா ரோசாஸ் தெரிவித்துள்ளார்.
“எந்தவொரு சூழ்நிலையிலும் மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது என்றும் குவேரா ரோசாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இதேபோன்ற சட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வியடைந்துள்ளன.
தற்போதைய சட்ட மூலம் சட்டமாக மாறுவதற்கு முன்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்பை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




