பயங்கரவாத சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் ம.ம.மு எந்த போராட்டத்தையும்வடகிழக்கு கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது

0
174

அவசர கால சட்டத்தில் அதிகமான பாதிப்பை மலையகத்தில் சந்தித்தவர்கள் மலையக மக்கள் முன்னணியே. எங்களுடைய தலைவர் கைது செய்யப்பட்டார். கட்சியின் விசுவாசிகள் கைது செய்யப்பட்டனர்.எனவே இந்த சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் மலையக மக்கள் முன்னணி எந்த போராட்டத்தையும் வடகிழக்கு கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.அவசர கால சட்டத்தை வலுவிழக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடகிழக்கு கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் கையெழுத்து வேட்டை இன்று (06.03.2022) நுவரெலியாவில் இடம்பெற்றது

நுவரெலியா பிரதான நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சாணக்கியன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மயில்வாகனம் உதயகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்த இங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்

அவசர கால சட்டம் என்பது தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டமாகவே இந்த நாட்டில் பலரும் கருதுகின்றார்கள்.அனால் அந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் இருக்கின்ற அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தகின்ற ஒரு சட்டமாகும்.

இந்த சட்டத்தின் மூலமான எந்த ஒரு நபரையும் கைது செய்கின்ற அதிகாரம் பொலிசாரிடம் இருக்கின்றது.எனவே அனைத்து மக்களும் இணைந்து இந்த சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்.

இந்த சட்டத்தின் மூலமாக அதிக பாதிப்ரப சந்தித்த மலையக கட்சி என்றால் அது மலையக மக்கள் முன்னணி என்பதை அனைவரும் அறிவார்கள்.எங்களுடைய கட்சியின் தலைவர் இந்த சட்டத்தின் மூலமா கைது செய்யப்பட்டார்.அவர் துன்புறுத்தப்பட்டார்.அதே போல எங்களுடைய கட்சியின் விசுவாசிகள் கைது செய்யப்பட்டு எந்த காரணமும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டனர்.

எனவே யுத்தம் வடகிழக்கிலே நடந்தாலும் மலையக பகுதியில் இருக்கின்ற இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.எனவே இந்த சட்டம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மலையகத்தில் மிகவும் அக்கறையாக இருக்கின்றோம்.

நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற பொழுது வடகிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளை பாடசாலைகளில் செய்திருக்கின்றேன்.அதன் போது எனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.

அதற்கு காரணம் நாங்கள் இரண்டு சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.அப்படி செயற்பட்டால் மாத்திரமே வடகிழக்கு மக்களும் மலையக மக்களும் எங்களுடைய உரிமைகளையும் அபிவிருத்தியையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் நன்கு உணர்ந்து செயற்படுகின்றது.இந்த நிலைமை தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here