வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
இது குறித்து மார்க் கார்னி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதை கனடா எப்போதும் உறுதியாக ஆதரிக்கும்.இஸ்ரேல் அரசுடன் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் ஒரு சுதந்திரமான, சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு பலஸ்தீனம். இருநாடுகள் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண, கனடா நீண்ட காலமாக உறுதிபூண்டுள்ளது.வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.,வில் பலஸ்தீன அரசை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
கனடா முடிவிற்கு அமெரிக்கா, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த நேரத்தில் கனடா அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஹமாஸுக்கு ஒரு வெகுமதியாகும்.
காஸாவில் போர்நிறுத்தத்தை அடைவதற்கான முயற்சிகளுக்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு கட்டமைப்பிற்கும் தீங்கு விளைவிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரித்தானியா, பிரான்ஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.