ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.
இதையடுத்து, நாளை மறுதினம் துபாயில் அரங்கேறும் முக்கியமான லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இவ்விரு அணிகள் முதல் முறையாக சந்திக்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய வீரர்கள் ஆட்டத்தின் மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தியாவிடம் சிறந்த அணி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்ற விஷயங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல், தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். களம் இறங்கி வெற்றி பெறுங்கள். அரசாங்கம் தங்களது வேலையை பார்த்துக் கொள்ளும். வீரர்கள் தங்களது வேலையை சரியாக செய்ய வேண்டும். அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நன்றாக ஆடியது. கோப்பையையும் நமது அணி வெல்லும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.