மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று தொடங்கியது. தோல்வியை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில், வெளிநாட்டு அழுத்தம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் திகதி தொடங்கியது.
ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது.
இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
” ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 22 நிமிடங்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு இந்திய எல்லை பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.
வெளிநாட்டு அழுத்தம் காரணமாக போர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்திய ராணுவ பிரதானியை, பாகிஸ்தான் இராணுவ பிரதானி தொடர்பு கொண்டு போரை நிறுத்த கோரினார். இதன்பிறகு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது.” – எனவும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.