பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் இன்று (20) நண்பகல் 12:00 மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக தலைமை தாங்க உள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர, புலனாய்வு தகவல்களை முறையாகக் கையாளவில்லை எனக் குற்றஞ்சாட்டி, 31 எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், பிரேரணை தொடர்பான தற்போதைய பிரச்சினைகள், அரசாங்கத்தின் பதில்கள், மற்றும் நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் இந்தப் பிரேரணையின் சட்டபூர்வ தன்மையை ஆய்வு செய்து, பின்னர் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.