நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துடனான தொடர்களை நடத்தும் வாய்ப்பினை தவறவிட்டதன் பின்னர் பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வென்றுள்ளது.
வியாழன் இரவு கராச்சியில் ஆரம்பமான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் நிர்ணயித்த 208 ஓட்டங்களை துரத்திய பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் மற்றும் 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்தது.
டி-20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் அதிகபட்சமான ரன் சேஸைப் பதிவு செய்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிகோலஷ் பூரண் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுள் பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது.
கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான முதல் போட்டியில் 63 ஓட்டங்களினாலு, 14 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது போட்டியில் 9 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றிருந்தது பாகிஸ்தான்.
இந் நிலையில் மூன்றாவது போட்டி நேற்றிரவு கராச்சியில் இரு அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் ஆர்மப வீரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 43 ஓட்டங்களையும், ஷமர் ப்ரூக்ஸ் 49 ஓட்டங்களையும் பெற அதன் பின் வந்த நிகோலஷ் பூரண் 64 ஓட்டங்களையும், டேரன் பிராவோ 34 ஓட்டங்களையும் ரோவ்மேன் பவல் 6 ஓட்டங்களையும் பெற்றனர்.
208 என்ற கடின இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு முதல் விக்கெட் இணைப்பாட்டம் நல்ல ஆரம்பத்தை கொடுத்தது.
ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஜோடியினர் 15 ஓவர்களில் 158 ஓட்டங்களை குவித்தனர்.
பின்னர் 15.1 ஆவது ஓவரில் பாபர் அசாம் 53 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களுடனும், 17.2 ஆவது ஓவரில் மொஹமட் ரிஸ்வான் 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளாக 87 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
மூன்றாவது வீராக களமிறங்கிய ஃபக்கர் ஜமான் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காது 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும் பின்னர் ஆசிஃப் அலி 7 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கலாக 21 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றியை 18.5 ஆவது ஓவரில் உறுதிபடுத்தினார்.
இதனிடையே ரிஸ்வான் ஒரே ஆண்டில் டி-20 கிரிக்கெட் அரங்கில் இரண்டாயிரம் ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றமையும் விசேட அம்சமாகும்.
அத்துடன் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாமின் ஜோடி டி-20 கிரிக்கெட்டில் 6 சதங்களை பெற்ற முதல் தொடக்க ஜோடி என்றும் பதிவானது.
மொஹமட் ரிஸ்வானுக்கு போட்டியின் நாயகன் மற்றும் தொடரின் நாயகன் விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.