2025 இலக்கிய மாதத்துடன் இணைந்ததாக பாராளுமன்ற கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பளிங்கு ரேண’ (Wingfield Family) மேடை நாடகம் 2025.10.23 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வைபவ மண்டபத்தில் பி.ப. 6.30 மணிக்கு அரங்கேற்றப்படவுள்ளது.
இந்த ‘பளிங்கு ரேண’ மேடை நாடகம் அமெரிக்காவின் பிரபல நாடக ஆசிரியர் டென்னிசி வில்லியம்ஸின் The Glass Menagerie எனும் சிறந்த தரத்திலான மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடக ஆசிரியர் ஹென்றி ஜயசேன அவர்களினால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்ட இந்த ‘பளிங்கு ரேண’ மேடை நாடகம், பூஜித்த டி மெல் அவர்களினால் இயக்கப்பட்டுள்ளது. சாந்தணி செனவிரத்ன, ஸ்செவியர் கனிஷ்க, மனுஷி டானியா, பிம்சர சில்வா ஆகிய கலைஞர்களின் பங்களிப்புடன் இந்த மேடை நாடகம் அரங்கேற்றப்படும்.
இந்நிகழ்வில் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.