பாராளுமன்றம் ஓகஸ்ட் 19 முதல் 22 வரை கூடும்!

0
6

2025 ஓகஸ்ட் மாதம் இரண்டாவது பாராளுமன்ற வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில்  நேற்று (06) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கு அமைய ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓகஸ்ட் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு, பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2443/14ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2441/14ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்தக்தினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஓகஸ்ட் 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, இறப்பர் கட்டுப்பாடு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் 2437/24ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை, நீதித்துறைச் சட்டத்தின் கீழ் 2440/27ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2434/02ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட தீர்மானம், உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2434/04ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை, நிதிச் சட்டத்தின் கீழ் 2434/05ஆம் இலக்க ஒழுங்குவிதி மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2430/13ஆம் இலக்க ஒழுங்குவிதி குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 2025 ஜூலை 24ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு விவாதத்திற்காக ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here