முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை வழக்கின் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது, நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் மோதலைத் தொடர்ந்து அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய 42 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைகளின் ஒரு கட்டமாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 சந்தேகநபர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி கடும் பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.
பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கம்பஹா மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் எடுத்த முடிவை ரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள 2024 பெப்ரவரி 12 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, இன்றைய வழக்கு விசாரணையின் போது, 37 பேரில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.




