இந்தியா ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வேலேருபாடு பகுதியிலிருந்து ஜங்காரெட்டி கூடத்திற்கு நேற்று காலை 9 மணியளவில் ஆந்திர அரசு பஸ் 57 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
ஜல்லேரு பகுதியில் ஆற்றுப் பாலத்தின் மீது பஸ் வேகமாக சென்றது. அப்போது முன்னால் சென்ற பஸ்ஸை முந்திய போது எதிரே வேறொரு வாகனம் வந்ததால், பஸ் ஓட்டுநர் சின்னா ராவ் (46) பஸ்ஸை இடது பக்கம் திருப்பி உள்ளார். இதில் பாலத்தின் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு 30 அடிக்கு கீழே இருந்த ஆற்றில் பஸ் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர், 5 பெண்கள் உட்பட 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிலர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். 13 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை பொதுமக்கள், தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் மீட்டு, ஜங்காரெட்டி கூடம் அரசு பொது மருத்துமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு, தலா ரூ.5 லட்சம் நிதி உதவி, காயமடைந்தோருக்கு அரசு செலவில் சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டார். இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து துறை அமைச்சர் பி.நானி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.