காதர் மாஸ்டர் என்று அழைக்கப்படும் பாவா அப்துல்காதர் என்பவர் ஆரம்பகாலத்தில் மலையக விடுதலை இயக்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் தலைவர் செயலாளர், உறுப்பினர் என்று தன்னை மட்டும் நிலைநிறுத்திக்கொண்டு செயல்பட்ட ஒருவர். பின்னர் நாட்டு துப்பாக்கியொன்றுடன் பிடிபட்ட அவர் சிறைவாசம் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளியேறியவுடன் சந்திரசேகரன் தலைமையில் உருவான மலையக மக்கள் முன்னணியில் இணைந்து அதன் செயலாளராக செயற்பட்டவர் இந்தக்காலத்தில் சந்திரசேகரன் அவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்த அமைப்பை பிரித்து தனியாக செயற்பட முனைந்தார் எனினும் அதில் அவரால் மிளிரமுடியவில்லை இதன்காரணமாக தன்னோடு பிரிந்து வந்தவர்களையும் கைவிட்டுவிட்டு பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்தார் அங்கு அரசியல் தஞ்சம் பெற்றபின்னர் சுமார் 25 ஆண்டுகள் அமைதியாக இருந்த இவர் 2017இல் சொலிடார்ட்டி மலையகம் என்ற ஒரு அமைப்பை பிரித்தானியாவில் பதிவுசெய்து அதை அரசசார்பற்ற அமைப்பாக உருவாக்கி நிதி திரட்டலில் ஈடுபட்டார். எனினும் அந்த அமைப்பு ஊடாக திரட்டப்பட்ட நிதி தொடர்பில் எந்த கணக்கும் காட்டப்படவில்லை அதேவேளை மலையகத்தில் இதன் ஊடாக எந்த செயற்பாடும் இடம்பெறவில்லை.
பிரித்தானியாவில் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனியாக இயங்கும் அளவுக்கு நிலைமை சரியானதும் மீண்டும் மலையகம் நோக்கி அவரின் பார்வை திரும்புகின்றது. இதற்காக அவர் முன்னெடுக்கும் முதல் ஆயுதம் 1984இல் ஈரோஸ் அமைப்பால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் என்ற நூலாகும். இந்த நூல் மலையகத்தமிழர்களின் வாழ்க்கைநிலையை உலகறிய செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கோடு காதர் அவர்களை சென்னைக்கு அழைத்து எழுதவைக்கப்பட்டது. ஈரோஸின் உப அமைப்பான ஈழ ஆய்வு நிறுவனத்தின் ஊடாக வெளியிடப்பட்டது. இதை எழுதியதற்காக தொகையும் காதருக்கு வழங்கப்பட்டது. “இருபதாம் நூற்றண்டின் நவீன அடிமைத்தனம்” வெளியீட்டு உரிமம் மற்றும் அதற்காக பாடுபட்ட ஈரோஸ் தோழர்களின் அர்ப்பணிப்பு என்பன இதில் உள்ளடங்கும். இந்த நூல் எழுதப்பட்டபோது அதன் எழுத்தாளர் பெயர்கூட மோகன்ராஜ் என்றே இருக்கும். இப்போது நடப்பதென்ன அந்த நூலின் வடிவமைப்பை மாற்றி பி ஏ காதர் என்ற பெயரோடு அட்டனில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த நூலை வேறொருவரின் பெயரில் மறுபதிப்பு செய்து சட்டசிக்கலிலிருந்து தப்புவதற்காக சில மாற்றங்களை செய்துள்ளார். இவரின் இந்த கபடத்தனமான செயலை புலத்திலும் நாட்டிலும் ஜனநாயரீதியாக செயற்படும் ஈரோஸின் தோழர்களை மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூல் வெளியீட்டுக்கு துணைபோகும் பேராசிரியர் விஜயச்சந்திரன், கலாநிதி ஆர் ரமேஷ், கிங்ஸ்லி கோமஸ் போன்றவர்களையும் எமது வரலாற்றை ஒருமுறை திரும்பிப்பார்க்குமாறு வேண்டுகிறோம். ஒரு அமைப்பின் தியாகத்தை கொச்சைப்படுத்த முனையவேண்டாம் என உங்களை வேண்டுகிறோம்.