புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18 ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியில் நூற்று அறுபது நாடாளுமன்ற பதவிகளை இந்த வருடம் நாடாளுமன்றத்திற்கு வழங்கி மக்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் எனவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, புதிய அமைச்சரவை அதிகபட்சமாக இருபத்தைந்து அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் அதிகபட்சமாக இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய அரசாங்கத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.