நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளின் தேர்தலுக்கு பின் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஓர் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதில் கடந்த ஆட்சி காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ இவர்கள் அக்காலகட்டத்தில் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுப்பட்டு நாட்டைவிட்டும் ஓடி சென்றிருந்தார். இவ்வாறான புதிய அரசாங்கத்தை ஆரம்பிக்கும் போது பசில் ராஜபக்ஷவை இணைத்துக்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
மஹிந்தவும், மைத்திரியும் இணைந்த புதிய அரசாங்கம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த அரசாங்கம் தொடர்பில் செய்திகளை வெளியிடுவதற்குமான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று 18.02.2018 அட்டன் சுதந்திர கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மஹிந்த மட்டும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஊடாக புதிய அரசாங்கம் ஒன்றை ஆரம்பிக்கப்படும் போது இதில் பசில் ராஜபக்ஷவை இணைத்துக் கொண்டால் கடந்த அரசாங்கத்தில் அவர் செய்த ஊழல்களை மீண்டும் இதில் தொடர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த இவர் எக்காரணத்தை கொண்டும் இவரை இணைத்துக் கொள்ள கூடாது என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிர்வப்படவுள்ள புதிய அரசாங்கத்தில் சிறுபான்மை இன மக்கள் நினைத்ததை போன்று அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று வடக்கு, கிழக்கு சிறுபான்மை இன கட்சிகள் அனைத்தும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றமையினால் வடக்கு, கிழக்கு சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் வென்றெடுக்க கூடிய வழிவகை அமையும்.
அதனை போன்றே பிணைமுறி ஊழல் மோசடியில் ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக ஈடுப்பட்டு இருப்பதாகவும், இதனால் மலையக மக்களுக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதிகளில் மோசடி இடம்பெற்று அம்மக்கள் எதிர்காலத்தில் அவதியுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகையினால் மலையகத்தின் சிறுபான்மை இன கட்சிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மலையக மக்களுடைய எதிர்கால நலனுக்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)