புத்தாண்டினை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

0
129

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (23) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவையின் அடிப்படையில் இன்று முதல் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக புறக்கோட்டை மற்றும் மாகும்புற பிரதான பஸ் நிலையங்களில் இருந்து 40 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று முதல் சில விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வழமையான நீண்ட தூர புகையிரத சேவைகளுக்கு மேலதிகமாக இந்த ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன.

இன்று இரவு 07.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட புகையிரதமும், 24 மற்றும் 26ம் திகதிகளில் காலை 7.10 மணிக்கு பதுளைக்கு இரண்டு விசேட புகையிரதங்களும் சேவையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 25ஆம் திகதி காலை 07.30 மற்றும் மாலை 07.30க்கு இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டைக்கும் காங்கசன்துறைக்கும் இடையில் இரண்டு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here