ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் உள்ள நாக்ஸ் (Knox) பகுதியைச் சேர்ந்த மேயர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வளர்ப்பு பூனைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டன. நோய் தொற்றின் பரவல் விகிதம் குறைந்தவுடன் அந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவில் விந்தையாக பூனைகள் பொதுவெளியில் செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீறும் குடியிருப்புவாசிகளுக்கு பெரும் தொகை அபாரதமாக விதிக்கப்படும் என்றும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் உள்ள நாக்ஸ் (Knox) பகுதியைச் சேர்ந்த மேயர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நாக்ஸ் பகுதியில் வசிப்பவர்கள் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வீட்டில் வளர்க்கும் பூனைகள் பொதுவெளிக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரவர் வீட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டுமே பூனைகள் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், பொதுவெளியில் பூனைகள் வந்தால் அதற்கு உரிமையாளர்களே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.
அரசின் உத்தரவுக்கு ஏற்ப வளர்ப்பு பூனைகளை வீட்டிற்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாக்ஸ் பகுதி மேயர், மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது எனவும், ஆனால் சட்டம் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கொடுக்கப்பட்ட அவகாசத்துக்குப் பிறகு பூனைகள் பொதுவெளியில் நடமாடுவது உறுதி செய்யப்பட்டால் அதிகபட்சமாக 400 அமெரிக்க டாலர் அவரை அபராதமாக விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல்முறை அபராதத்தில் சிக்குவோருக்கு 68 அமெரிக்க டாலரும், அடுத்தடுத்த முறை சிக்குபவர்களுக்கு அதிகபட்சமாக 408 டாலர் வரை அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களுக்கும் பொருந்தும் என நாக்ஸ் மேயர் அறிவிப்பில் கூறியுள்ளார். பூனைகள் உலாவுதை கண்காணிக்க அரசு சார்பில் மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
எதற்காக இந்தச் சட்டம் என அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் கேட்டபோது, நோய் தொற்றில் இருந்து பூனைகளை பாதுகாக்கவும், வெளியில் செல்லும்போது சக பூனைகளுடன் ஏற்படும் மோதலால் உருவாகும் காயங்களை தவிர்ப்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் பூனை வேட்டை அதிகளவில் இருப்பதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக நாக்ஸ் பகுதி மேயர் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அபராதம் கூடுதலாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நாக்ஸ் பகுதி மக்கள், அதனை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒருசிலர் இந்த சட்டம் குறித்து பேசும்போது, பூனைகளால் சிறிய பறவைகள் மற்றும் எலிகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருவதாகவும், இந்த கட்டுப்பாடு எலி மற்றும் சிறிய ரக குருவிகளின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்எ னெ கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது என்பது புதியதல்ல. ஏற்கனவே, அடிலெய்டு நகரத்துக்கு அருகாமையில் இருக்கும் மௌன்ட் பார்க்கர் பகுதியிலும் பூனைகளுக்கு கட்டுபாடுகள் விதிகப்பட்டுள்ளது. அங்கு வசிப்பவர்கள் 2 பூனைகளுக்கு மேல் வளர்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.