முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் தண்டிக்கப்பட வேண்டிய சில தவறுகள் தமது குழுவினால் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை உடைகள் இன்றி புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தி படுக்க அழைப்பதும், பணம் பறிப்பது போன்ற குற்றங்கள் இடம்பெறுவதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிவுறுத்தியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பதால் தற்போது PTK 001 ஆவா குழுவினர் தகுந்த தண்டனை வழங்க முன்வந்துள்ளனர் என குறித்த அனாமதேய துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றும் இதில் தற்போது 5 மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இன்றில் இருந்து தாங்களவே திருந்திக் கொள்ள வேண்டும் என்றும் பாலியல் துஸ்பிரயோகம் மிரட்டி பணம் பறித்தல் கெரோயின் விற்பனை செய்பவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்பட இருக்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.