பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி

0
130

பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயது அடங்கிய கைக்குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே அந்த யாசகரிடமிருந்த கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, ஓட்டோவொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம், கடந்த 28 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அந்த பெண் யாசகர் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த கைக்குழந்தையே இவ்வாறு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது ஓட்டோவில் வந்திறங்கிய மூவரடங்கிய குழுவினர், அந்தக் குழந்தைக்கு ஆடைகளை வாங்கி தருவதாகக் கூறி, அப்பெண்ணையும் ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு தெமட்டகொடை பிரதேசத்துள்ள ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஓட்டோவுக்கான வாடகை கட்டணத்தை செலுத்தி ஓட்டோவை அனுப்பி வைத்துள்ளனர்.

பு​டவை கடைக்குச் சென்றவர்கள் சுமார் 1,900 ரூபாய்க்கு ஆடைகளை குழந்தைக்காக கொள்வனவு செய்துள்ளனர். அதனை குழந்தைக்கு உடுத்திவிட்டதன் பின்னர். அங்கிருந்து மற்றுமொரு ஓட்டோவில் ஏறி, கொம்பனி வீதிக்கு வந்துள்ளனர்.

அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாகவிருக்கும் வாகன தரிப்பிடத்துக்கு ஓட்டோவை செலுத்திச் சென்றுள்ளனர். ஆட்டோவில் இருந்த பெண், கைக்குழந்தை தன்னிடம் தாருமாறும் தான் தூக்கிக்கொண்டு வருவமாகவும் யாசகரிடம் (பெண்) கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், அதற்கு அந்த பெண் யாசகர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது அப்பெண்ணுடன் வந்திருந்த ஆண், யாசகரை தாக்கி ஓட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு, கைக்குழந்தையுடன் தப்பியோடிவிட்டனர்.

இதுதொடர்பில் பெண் யாசகரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தார்.

தன்னுடைய குழந்தை இல்லாது அந்த பெண் யாசகர் கதறி அழுதுகொண்டிருக்கின்றார் என்றும்​ தெரிவித்த பொலிஸார், குழந்தையை கடத்தியவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை. எனினும், குழந்தை பாக்கியம் இல்லாத ஜோடியே இந்தக் குழந்தையை கடத்தியிருக்கவேண்டும் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here