பெனிதெனிய, திகனை பஸ்சேவைகளில் அடிப்படை மாற்றம்

0
197

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ம் திகதி முதல் கண்டி – பெனிதெனிய, கண்டி – திகன பஸ் போக்குவரத்து சேவையில் மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளதாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கண்டி செயலக கேட்போர் கூடத்தில் விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்டி பல்வகைமை போக்குவரத்து முனையத்தின் பணிகள் 2027ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. இருப்பினும் அதற்கு முன், சில முன்னோடி நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளோம். கண்டி நகர வாகன நெரிசலை ஓரளவேனும் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கண்டி நகரத்திற்குள் தினம் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பயணிகள் முதல் 3 இலட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வரை நகரத்திற்குள் பிரவேசிக்கின்றனர்.

இவர்களில் அனேகர் ஓரிடத்தில் இறங்கி பின்னர் பிரிது ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு பஸ் வண்டியை எடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். அதாவது கண்டி நகரில் தனித்தனியாக 110 பஸ்சேவைகளுக்கான இடங்கள் (தரிப்புக்கள்) ஒதுக்கப்பட்டுள்ளன. எமது தற்காலிக போக்குவரத்துத்துத் திட்டத்தின் படி அது 48 தரிப்பிடங்களாக குறைக்கப்பட உள்ளது.

எனவே முதல் நடவடிக்கைகயாக திகனையில் இருந்து கண்டிக்கு வரும் பஸ்வண்டிகள், கண்டி ஊடாக பெணிதெனிய வரை செல்லும். அதே போல் பெனிதெனியாவில் இருந்து கண்டி ஊடாக திகனைநோக்கி பஸ் வண்டிகள் அனுப்பப் படும். இவை ஏற்கனவே நான்கு நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் கண்டியில் இருந்து சேவையை ஆரம்பிக்கின்றன. இதற்காக இரு பக்கமும் செல்வதற்கு ஒரே நேரத்தில் பல பஸ்வண்டிகள் “ட்ரொரிங்டன்” பஸ்தரிப்பில் காத்து நிற்கின்றன.

புதிய திட்டப்படி பஸ்வண்டிகள் திகனை நகரத்திலும், பெனிதெனியாவிலும் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் (பாக்கிங்). கண்டி நகரத்தில் பயணிகளை ஏற்றி இறக்கும் வேலை மட்டுமே நடக்கும். பாக் பண்ணுதல் கிடையாது. ஒருங்கிணைந்த அட்டவணையின்படி பஸ்களை இயக்குவதற்கான புதிய திட்டமாக இது இருக்கும். இது செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும்.

கண்டி பல்வகை போக்குவரத்து முனையத்தின் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டு நிறைவடைந்தவுடன், அந்த முனையம் வழியாக நாடு முழுவதும் பஸ்களை இயக்கும் திட்டம் அமுலாகும். அதன் முதல் கட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக இது செயல்படுத்தப்பட உள்ளது. இதுபோன்று இன்னும் சில மாற்றங்களும் மேற்கொள்ள உள்ளோம்.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.சரத் அபயகோன், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜயமுனி, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here