பெருந்தோட்ட துறையின் நடைமுறை போக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்னர் தெரிவித்ததை போன்று பாடசாலைக்கான காணியை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருக்கு பணிப்பு விடுத்தார்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகனின் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், நுவரெலியா, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய கல்வி வலய பாடசாலைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை பயன்பாட்டுக்கு பகிர்ந்தளிக்கும் வைபம் 28.06.2018 அன்று கொட்டகலையில் இடம்பெற்றது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகனின் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபைகளின் தலைவர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு பணிப்பு விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரிட்சையில் மலையக பாடசாலைகள் பல சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இதனையிட்டு நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.
இவ்வாறான பாடசாலைகளில் திறமையான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எதிர்காலத்தை நாமே பாதுகாக்க வேண்டும்.
எம்மை பொருத்த வரையில் அரசாங்கம் எமக்காக 3000 தொடக்கம் 5000 வரையிலான தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றது.
ஆனால் இந்த தொழில் வாய்ப்புகளை முழுமையாக அனுபவிக்க கூடிய வகையில் படித்து விட்டு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். வெறுமனே தகுதியானவர்கள் இல்லாத பட்சத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற தொழில் வாய்ப்புகள் எமது சமூத்தில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
எதிர்வரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது. உதாரணமாக 500 பேருக்கு தொழிலை கொடுத்து பின் 3000 பேருக்கு வேறு ஒரு தொழிலை கொடுக்க அரசாங்கம் முன்வரும் பொழுது 500 பேருக்கு வழங்கிய தொழிலிலிருந்து 3000 பேருக்கு வழங்கப்படும் தொழில் மீது ஆசைப்பட்டு சுமார் 250 பேர் முன்னர் வழங்கிய தொழிலிலிருந்து தாவிச் சென்றுள்ளனர்.
அப்போது 500 பேருக்கு வழங்கப்பட்ட இந்த தொழில் 200 பேர் மாத்திரமே இருப்பார்கள். மிகுதி 300 பேருக்கான வெற்றிடத்தை நிரப்ப மீண்டும் ஒரு வாய்ப்பு எமக்கு கிடைப்பதில்லை.
அகையால் 300 பேருக்கான தொழிலில் தேக்க நிலை எற்படுகின்றது என சுட்டிக்காட்டியதோடு, எதிர்காலத்தில் இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு நமது பிள்ளைகள் எந்த தொழிலுக்கு ஆசைப்படுகின்றார்களோ அந்த தொழிலுக்கு அவர்களை பயிற்றுவித்து தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
இதன்போது, அரசாங்கம் நமக்கு வழங்குகின்ற தொழிலுக்கு ஏற்புடையதாக இல்லை. அதற்கான பதவிகளுக்கு நமது பிள்ளைகளை நியமித்து கொள்ள முடியும்.அப்போது தொழில் தேக்க நிலைமை நமது சமூகத்திற்கு வராது என அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)