” பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் தனியார்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு துணைபோயுள்ள இ.தொ.கா. பிரதிநிதிகள்தான் மக்கள் முன் முண்டியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜீவன் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” கண்டி மாவட்டத்தின் மெதமஹநுவர – வுட் சைட் தோட்ட மக்களை சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றுவதற்கு நீண்ட நாட்களாக முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக காணிகள் இனம்காணப்பட்டு கடந்த காலத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வுட் சைட் தோட்டத்தில் வாழும் ஒவ்வரு குடும்பத்திற்கும் இரண்டு ஏக்கர் காணியை பகிர்ந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் இன்று, தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை ஒதுக்கிவிட்டு, வெளியாட்களுக்கு 2 ஏக்கர் படி காணி வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இதற்கு முழு ஆதரவையும் வழங்கி, காட்டிக்கொடுப்பை செய்துகொண்டிருப்பது, இ.தொ.க பிரதிநிதியாகும். அவர்கள் இதற்கென கடந்த காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் காணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரையும் இணைத்துக்கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் காணி விற்பனைக்கான காரியாலயம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இவ்வாறு வெட்கக்கேடான வேலைகளை இதற்கு முன் எவரும் செய்தது கிடையாது.
நுவரெலியாவில் எடுபடாத, கழித்து ஒதுக்கப்பட்டதுகளை கண்டிக்கு கொண்டு வந்து, கண்டி மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம். இந்த காட்டிக்கொடுப்புகளுக்கு மக்கள் முன் இவர்கள் மண்டியிட வேண்டும்.
வுட் சைட் தோட்ட காணிகள் அங்கு வாழும் தோட்ட மக்களுக்கே பகிரப்பட்ட வேண்டும். அவ்வாறில்லாமல் அரச பலத்தை பயன்படுத்தி வெளியாருக்கு பகிர்ந்தால் அதற்கு முழுக்க முழுக்க இ.தொ.க பிரதிநிதி பொறுப்பு கூற வேண்டும்.” – என்றுள்ளது.