பெருந்தோட்ட பகுதிகளில் சேவையிற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியைகளுக்கு அரசாங்கத்தின் எவ்வித நிவாரணமும் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்த ஆசிரியைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
திகா – உதயா நிவாரணத் திட்டத்தின் கீழ் கொட்டகலை பிரதேச பிரிடோ முன்பள்ளி ஆசிரியைகளுக்கு நிவாரண பொதிகளை வழங்கி வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் ராஜமாணிக்கம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் அமைப்பாளர் ஜஸ்டின்,
பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரின் பிரத்தியேக செயலாளர் பி . ஸ்ரீதரன், பிரிட்டோ நிறுவன இணைப்பாளர் கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்த வகையில் பெருந்தோட்ட பகுதியில் முன்பள்ளிகளில் சேவையாற்ற ஆசிரியைகளுக்கு எவ்வித கொடுப்பனவும் கிடைக்காத காரணத்தினால் அவர்களும் அவர்களில் தங்கி வாழ்கின்ற குடும்பத்தினரும் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாக கூறியபோதும் பெருந்தோட்ட பகுதிகளில் சேவையாற்றும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இதுவரை அரச நிவாரணம் கிடைக்கவில்லை.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் நிதிப் பங்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் பிரிடோ அரச சார்பற்ற நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற முன்பள்ளி ஆசிரியைகளுக்கு திகா- உதாயா நிவாரணத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.