பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களைப் பயிர் செய்கைக்காக வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போது, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போது, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் மிகவும் பாரதூரமானது எனவும் அது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களுடன், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு மற்றும் தரிசு நிலங்களைப் பயிர் செய்கைக்காகப் பயன்படுத்துவது குறித்துக் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளில் தரிசு நிலங்கள் இருப்பதற்கு இனியும் இடமளிக்க முடியாது எனவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள தரிசு நிலங்களில் பயிர் செய்கை செய்யப்பட வேண்டும் என நேற்றைய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் , அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து, அந்த இடங்களில் பயிர் செய்கையை முன்னெடுக்கும் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதியளித்துள்ளார்.