நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மலையகத்தில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடியான நிலையினை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவர்களின் பொருளாதாரம் உணவுக்கு கூட போதுமானதாக இல்லாத ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது இதனால் மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள்,போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட பல செலவுகளை செய்வதில் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.ஆகவே பெருந்தோட்ட மாணவர்களுக்கு உதவ வர்த்தக சமூகம் முன்வர வேண்டும் என மலையக மக்கள் சக்தியின் தலைவர். இராமன் செந்தூரன் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தில் இம் முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி உயர்தரத்திற்கு சித்தி பெற்ற மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இன்று 12 ம் திகதி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அதிகமான மாணவர்கள் கற்றலை தொடர முடியாததன் காரணமாக பாடசாலை கல்வியினை கைவிட்டு விட்டு வேலைக்கு செல்கின்றனர். இந்நிலை மாற வேண்டும் என்றால் எமது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் தான் சமூகத்தை மாற்ற முடியும் எமது மாணவர்களுக்கு என்று அவர்களின் பெற்றோர்கள் சொத்துக்களையோ காணிகளையோ சேர்த்து வைக்கவில்லை அவர்கள் பெரும் சம்பளத்தில் அவர்களுக்கு அவ்வாறு சொத்துக்களையோ காணிகளையோ சேர்த்து வைக்கவும் முடியாது அவர்கள் உழைப்பில் வாழ்வதே இன்று கேள்விக்குறியாகியுள்ளது இந்நிலையில் இவர்கள் பிள்ளைகளை படிக்;க வைப்பது எவ்வாறு ஆகவே பணம் படைத்தவர்கள் மலையக மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் இதன் போது மேலும் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வுக்கு முன்னாள் அதிபர் கே. மோகனவாணி,மலையக அரசியல் ஆர்வலர் சரவணகுமார்.உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்.




