இன்று காலை முதல் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆட்டோ தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக மாற்று தொழிலுக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக மலையக பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி தொழிலில் ஈடுபடும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தில் இன்று ஆயிரங்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக முச்சக்கரவண்டி சாரதிகளாக பணிபுரிகின்றனர். இவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முச்சக்கரவண்டி சாரதி தொழிலிலேயே தங்கியுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றியதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் பலமடங்காக உயர்ந்துள்ள நிலையில் தற்போது பெற்றோல் விலையும் பலதடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றும் கூட பெற்றோலின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த தொழிலை பொறுத்த வரையில் பெரும்பாலும் தோட்டத்தொழிலாளர்களை மையமாகக் கொண்டே காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களின் பொருளாதாரமும் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதனால் பெற்றோலின் உயர்வுக்கு ஏற்ப அவர்களிடம் கூலியை வாங்கமுடியாத நிலையே உள்ளன. அவ்வாறு ஆட்டோவுக்கான கட்டணம் அதிகரித்தாலும் சவாரியும் குறைந்துவிடுகின்றன. மேலதிகமாக பணம் கேட்டால் சவாரி செய்பவர்கள் வர மறுக்கின்றனர். இதனால் எங்களுக்கு மாற்று தொழிலொன்றை தேடிச்செல்லவேண்டிய நிலையே உருவாகியிருப்பதாக ஆட்டோ சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்