மலையக பிரதேசத்தில் அதிகாலை வேளையில் கடுமையான பனி பொழிவதால் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் பிரதேசத்தில் கடந்த வாரம் பொழிந்த பனியினால் பெல்மோரல் தோட்டத்தில் மாத்திரம் 50 ஏக்கர் தேயிலை செடிகள் கருகியுள்ளதாக இத்தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் 120 ஏக்கர் தேயிலை மலைகள் இருக்கின்ற போதிலும் இதில் 50 ஏக்கர் பனியினால் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 70 ஏக்கர் தேயிலை மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பு இன்றி இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தோட்ட நிர்வாகத்தினால், தினமும் பறிக்கக் கூறும் 18 கிலோகிராம் தேயிலையைப் பறிக்கமுடியாமல் போகிறது எனவும், தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக குடும்ப பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், குடும்ப செலவினை சமாளிக்க முடியாத சூழ் நிலையில் இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் அதிகரிக்கும் வரை தமக்கு அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகம் நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென இத்தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)