பொதுக் கழிப்பறையில் வாழ்ந்து ஒரு வேளை உணவுக்கு சிரமப்பட்டவர் இன்று லண்டனில் பெரும் கோடீஸ்வரர் நான் லண்டனையும் எனது உணவகங்களையும் சொர்க்கமாக பார்க்கிறேன் என கூறும் ஹுசைன் ஓசர். துருக்கியை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு காலத்தில் பொது கழிப்பறையில் வசித்து வந்த நிலையில் தற்போது பெரும் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.
துருக்கியை சேர்ந்தவர் 74 வயதான ஹுசைன் ஓசர். இவருக்கு லண்டனில் உள்ள தெற்கு மோல்டன் தெருவில் உணவகம் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் இது அவருக்கு மூன்றாவது உணவகம் என்றே கூறப்படுகிறது. வறுமையின் பிடியில் இளம் வயதில் சிக்கி தவித்த ஓசர் தனது கடுமையான உழைப்பால் இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.
ஓசர் கூறுகையில், ”எனக்கு குழந்தை பருவம் மிகவும் கடினமாக இருந்தது, வளர்ப்பு தாயாரின் கொலை முயற்சியில் இருந்து நூலிழையில் தப்பியிருக்கிறேன்.
நான் பல ஆண்டுகளாக பொது கழிப்பறையில் வசித்தேன், அது தான் எனக்கு இருந்த ஒரே இடம். ஒவ்வொரு நாளும் ஒரு கிண்ணம் சூப் மற்றும் ஒரு சிறிய ரொட்டியில் (பாண்) தான் உயிர் வாழ்ந்தேன்.
1975 ஆம் ஆண்டில், 21 வயதில் ஆங்கிலம் கற்கும் நம்பிக்கையில் லண்டனுக்கு பேருந்தில் ஐந்து நாட்கள் பயணம் செய்தேன். பிறகு ஒரு கபாப் கடையில் பணியாற்றினேன், 1981ல் வங்கியில் இருந்து கடன் வாங்கி, அதே கடையை விலைக்கு வாங்கினேன்.
இப்படி தான் என் வாழ்க்கையில் முன்னேற்றம் வர தொடங்கியது, எனக்கு பணத்தை விட என் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி தான் முக்கியம். எனது வாடிக்கையாளர்கள் கண்ணியமான மனிதர்கள், நான் லண்டனையும் எனது உணவகங்களையும் சொர்க்கமாக பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.
வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சில் ஆகஸ்ட் 3 அன்று ஓசரின் புதிய உணவகத்திற்கான உரிமத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது,