பொது மன்னிப்பு வழங்கி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

0
150

இலங்கையில் பதவிக்கு வரும் அனைத்து ஜனாதிபதிகளும் பொதுமன்னிப்பை வழங்கின்ற போதிலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அவர்கள் கருணை காட்டுவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வந்த ரஞ்ஜன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ள பின்னணியில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே முன்னிணியன் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஷணன் இதனைக் கூறியுள்ளார்.

நுவரெலியா – தலவாக்கலை பகுதியில் வைத்து 28.08.2022 அன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் அரசியல் கைதிகள் அல்லது போராளிகள் 20 தொடக்கம் 25 ஆண்டுகளை தடுப்பு காவலிலேயே கழித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் எண்ணம் தற்போதைய ரணில் அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல கடந்த காலத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கத்திற்கும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஒவ்வொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கின்ற போதிலும் அதனை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை எனவும் இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்லாமல், கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகள் பொதுமன்னிப்பின் கீழ் சிலரை விடுதலை செய்துள்ளதாக கூறியுள்ள இராதாகிருஷ்ணன், ஏன் நீண்டகாலம் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அல்லது போராளிகளை விடுவிக்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி எந்தவொரு அமைச்சு பதவிகளையும் பெற்றுக்கொள்ளாது எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக மலையக மக்கள் முன்னணி அமைச்சு பதவிகளை எடுக்க மாட்டோம் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளது எனவும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் நாடடு மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்கும் பட்சத்தில் அதனை ஆதரிப்போம் எனவும் அனைத்தையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மலையக மக்கள் உட்பட நாட்டு மக்களுக்கு குறித்த வரவு செலவுத் திட்டம் பாதமாக அமையும் பட்சத்தில் அதனை எதிர்க்க தயங்க மாட்டோம் எனவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மலையக மக்களின் சம்பளம், காணி மற்றும் வீட்டு வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மலையக மக்களுக்காக 6800 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் தற்போதைய ஆட்சியில் வெறும் 582 வீடுகள் மாத்திரமே அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தவிர சில தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் குழாய் மூலமான குடிநீரையே நம்பியுள்ளதாகவும் அவர்கள் தற்போது 500 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள குடிநீரினால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நாட்டிலுள்ள மாணவர்கள் உட்பட பெரும்பாலான மக்கள் போஷாக்கு இன்றிய உணவுகளையே உட்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதுமிகவும் மோசமான நிலைமை எனக் கூறியுள்ள இராதாகிருஷ்ணன் பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரை இந்த நிலைமை மேலும் மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக தெரிவித்து பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளை பெற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க. தற்போது தனது கட்சியை பலப்படுத்தும் மற்றும் வளர்க்கும் செயற்பாடுகளிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும் இராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து, கட்சியின் பிரச்சினைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க அதிக முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் மற்றும் சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதை விட மக்களின் போஷாக்கு மற்றும் விலைவாசி பிரச்சினைகளை தீர்ப்பது மிகவும் முக்கியமானது எனவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கான வரிசைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அவை யாதார்த்ததில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here