நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்தவொரு பண்டிகையையும் மக்கள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, பொருளாதார நெருக்கடிக்கும் முகங் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தனிமைப் படுத்தல் சட்டங்கள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, ஆடம்பரமான முறையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கமால் அவரவர் வசதிக்கு ஏற்ப சிக்கனமாகவும் எளிமையாகவும் கொண்டாடுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் விடுத்துள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
காலத்துக்கு ஏற்றவாறு எமது கலை, கலாசார விழுமியங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பழைய மரபுகள் அனைத்தும் கொரோனா காலத்தில் இயல்பாகவே மாற்றம் பெற்றுள்ளன. அதில் பண்டிகைகளும் அடங்குகின்றன. ஆடம்பரம் படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு போதுமான வேலை நாட்கள் இல்லாமல் வருமானம் குறைந்துள்ளது. எதிர்பார்த்த 1000 ரூபா சம்பள உயர்வு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளது. எனவே, இருக்கின்ற வசதிக்கு ஏற்ப ஏதோ ஒரு வகையில் பண்டிகையைக் கொண்டாட வேண்டிய நிலையில் உள்ளோம்.
கொரோனா பிரச்சினை முற்று முழுதாகத் தீர்ந்து விடவில்லை. தீர்ந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் குடிகொண்டுள்ளது. ஆகவே, சுகாதார நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி அவரவர் வீடுகளிலேயே சொந்தங்களுடன் சந்தோசமாக இருப்பதற்கு உறுதி பூண வேண்டியது அவசியமாகும்.
தேவர்களுக்குத் துன்பம் கொடுத்து வந்த நரகாசுரனை இறைவன் வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டியது போல, கொரோனா என்ற அசுரனை விரட்டியடித்து, நாடும் மக்களும் சுபிட்சம் காண பிரார்த்தித்து அனைவருக்கும் இனிதான தீபத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.