பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.
பாதாளக் குழுக்களுடன் தனக்கு தொடர்புள்ளது என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை அடிப்படையாகக்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ உயிர் அச்சுறுத்தல் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து எனக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது கருத்து கூறுவதால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு எந்நேரத்திலும் நீக்கப்படலாம்.
அவ்வாறு நீக்கப்பட்டாலும் பாதுகாப்பு தருமாறு கெஞ்சப்போவதில்லை. வாழ்க்கையில் எனது இலக்கை அடைந்துவிட்டேன். இனி இறப்பதற்கு மட்டும்தான் உள்ளது.
1989 ஆம் ஆண்டில் இருந்து வியாபாரம் செய்கின்றேன். வருமான வரி செலுத்திவருகின்றேன். இந்நிலையில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு எனக்கு கறுப்பு புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்.” – என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான




