கடந்த கால ஆட்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாட்களில் அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.
வானொலி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மிக விரைவில் சமூகத்துக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க தாம் தொடர்ந்து செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.
போதைப்பொருளால் சீரழிந்து போயுள்ள சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் அடையாளங் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் தாம் எந்த வித தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களும் இல்லாமல் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் விவகாரத்தில் சிங்கள அரசியல்வாதிகள் மாத்திரம் தொடர்பில் இல்லையெனவும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தொடர்பில் உள்ளதாக சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
உரிய விசாரணைகள் நடத்தப்படும் வரை எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது எனவும் தகவல்கள் உண்மையா பொய்யா என்பதை விசாரணைகள் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.