மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் நேற்று ஐஸ் போதைபொருள் அருந்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் பதினாறு வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்தாக மாத்தறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவனிடம் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மாணவன், கொச்சிக்கடையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான சப்ரான் என்ற நண்பருடன் ஆறு மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு நாளொன்றுக்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபா தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தைத் தேடுவதற்காக தனது புகைப்படக் கலைஞரான தந்தையின் கமெராவை எடுத்து காதலர்கள் மற்றும் மக்களைப் படம்பிடித்ததாகவும் குறித்த மாணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகரம் மற்றும் கடற்கரையில் சுற்றித் திரிந்து பொதுமக்களை படம்பிடித்து அதை விற்று அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் போதை பொருளை கொள்வனவு செய்வதாகவும் மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.