மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்று

0
200

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (15) நடைபெறவுள்ளது.

பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையையும் சிறந்த பந்துவீச்சாளர்களையும் கொண்ட இந்தியாவை வெற்றிகொள்வது இலங்கைக்கு இலகுவாக அமையப் போவதில்லை.

எனவே இந்தியாவை வெற்றிகொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவிடம் கேட்டபோது, ‘எம்மிடம் திட்டம் இருக்கிறது.

நாங்கள் அதை வெளியிடமாட்டோம். அதனை மைதானத்தில் செயலில் காட்டுவோம். இந்தியா பலம் வாய்ந்த அணி என்பதையும்  அவ்வணியில் நட்சத்திர வீராங்கனைகள் இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.

எவ்வாறாயினும், அவற்றை பற்றி கருத்தில் கொள்ள மாட்டாம். நானும் அவர்களுடன் தொழில்முறை லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியு யுள்ளேன்.

எனவே அவர்களது பலம், பலவீனத்தை நான் அறிவேன். எமது அணி முகாமைத்துவத்துடன் கலந்தாலோசித்து சரியான திட்டத்தை வகுத்து சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்க முயற்சிக்கும்’ என்றார்.

ஆசிய கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத்தவறியது குறித்து கேட்டபோது, ‘துடுப்பாட்டத்தில் என்னால் பிரகாசிக்க முடியாமல் போனது குறித்து பெரும் ஏமாற்றம் அடைகிறேன்.

அணித் தலைவி என்ற வகையில் நான் திறமையை வெளிப்படுத்யிருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முழுத் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

அதேவேளை, எனது சக வீராங்ககைள் திறமையாக விளையாடியதையிட்டு நான் திருப்தி அடைகிறேன். இறுதிப் போட்டியிலும் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

நாங்கள் கூட்டு முயற்சியுடன் விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்போம். 14 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டியில் விளையாட எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை சாதகமாக்கிக்கொள்ள முயற்சிப்போம்’ என்றார் சமரி அத்தபத்து.

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் 7 தடவைகள் சம்பியனான இந்தியா தொடர்ந்து 7ஆவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

2004 இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக அமைந்தது.

மறுபுறத்தில் 4 தடவைகள் 2ஆம் இடத்தைப் பெற்ற இலங்கை 14 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

அந்த 4 சந்தர்ப்பங்களிலும் இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை அந்தத் தோல்விகளுக்கெல்லாம் பதிலடி கொடுத்து முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க முயற்சிக்கவுள்ளது.

இந்த வருடம் ஆடவர் ஆசிய கிண்ணத்தை இலங்கை வென்றதைத் தொடர்ந்து மகளிர் அணியும் சாதிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இலங்கை அணி சகலதுறைகளிலும் பிரகாசித்தால் மாத்திரமே வெற்றி கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

ஹர்ஷிதா சமரவிக்ரம (201 ஓட்டங்கள்), நிலக்ஷி டி சில்வா (124) ஆகிய இருவரே துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பந்துவீச்சில் இனோக்கா ரணவீர (12 விக்கெட்கள்), சுகந்தி குமாரி (6), காவிஷா டில்ஹாரி (6) ஆகியோர் திறமையாக செயற்பட்டுள்ளனர்.

இந்தத் தொடரில் இலங்கை அணியில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியுள்ள அணித் தலைவி சமரி அத்தபத்து இறுதிப் போட்டியில் அதிகப்பட்ச திறமையை வெளிப்படுத்துவது இலங்கைக்கு வரப்பிரசாதமாக அமையும்.

மறுபுறத்தில் இந்திய அணியில் ஜெமிமா ரொட்றிகஸ் (215 ஓட்டங்கள்), ஷஃபாலி வர்மா (161), சபினெனி மேகனா (114) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் தீப்தி ஷர்மா (13 விக்கெட்கள்), ராஜேஷ்வரி கயக்வாட் (7), ஸ்னேஹ் ரானா (5) ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.

இலங்கை:  சமரி அத்தபத்து (தலைவர்), அனுஷ்கா சஞ்சீவனி, ஹர்ஷித்தா சமரவிக்ரம,  நிலக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, ஓஷாதி ரணசிங்க, காவிஷா டில்ஹாரி, மல்ஷா ஷெஹானி, சுகந்திகா குமாரி, இனோக்கா ரணவீர, அச்சினி குலசூரிய.

இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்ம்ரிதி மந்தானா, ஜெமிமா ரொட்றிகஸ், சபினெனி மேகனா, தயாளன் ஹேமலதா, ஹார்மன்ப்ரீத் கோர் (தலைவி), பூஜா வஸ்த்ரகார், தீப்தி ஷர்மா, ஸ்னேஷ் ரானா அல்லது ராதா யாதவ், ரேனுகா சிங், ராஜேஷ்வரி கயக்வாட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here