இலங்கை மற்றும் இந்தியாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகாவுள்ள ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பணியாற்றவுள்ள அனைத்து நடுவர்களையும் பெண்களாக நியமிக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் இம்முறை மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக பெண்களைக் கொண்ட நடுவர் குழாத்தை ஐ.சி.சி அறிவித்துள்ளது
இது குறித்து ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா கூறியதாவது:
“நடுவர்கள் குழுவில் அனைவரையும் பெண்களாக பணியமர்த்தியது மிகப்பெரிய மைல்கல் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் என்பதன் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக பார்க்கிறோம். இந்த வளர்ச்சி அடையாள மதிப்பைத் தாண்டியது. கண்ணால் காணத்தக்க, எதிர்காலத்தில் பலரையும் உத்வேகம் கொள்ளதக்க வாய்ப்பாக அமையும்” என்றார்.
இந்த நிலையில், இந்த நடுவர்கள் குழாத்தில் இலங்கையைச் சேர்ந்த மிச்செல் பெரேரா போட்டி மத்தியஸ்தராகவும், நிமாலி பெரேரா கள நடுவராகவும் பணியாற்றவுள்ளனர். இருவரும் கோல்ட்ஸ் பெண்கள் அணிக்காக விளையாடியுள்ளனர்.
இதில் மிச்செல் பெரேரா இடது கை துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் செயல்பட்டுள்ளதுடன், நிமாலி பெரேரா வலது கை மித வேகபந்து வீச்சாளராகவும், வலது கை துடுப்பாட்ட வீரராகவும் இருந்துள்ளனர்.
மிச்செல் பெரேரா 2005 தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடியதுடன், நிமாலி பெரேரா இலங்கை A அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகள் (WODIs) மற்றும் மகளிர் T20I சர்வதேச போட்டிகளில் (WT20Is) நடுவர்களாக பணிபுரிந்த அனுபவம் உடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.