இந்த நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து ஒற்றுமையோடும் புரிந்துணர்வோடும் கொண்டாடும் பண்டிகையாக தமிழ் சிங்களப் புத்தாண்டு மலர்கிறது. அதேபோல், அனைத்து மக்களது வாழ்விலும் வசந்தம் வீசவும், வளங்கள் பெருகவும் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய கரங் கூப்பி வரவேற்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
வசந்த காலம் மலர்கிறது. பட்டுக் கிடந்த மரம், செடி கொடிகள் எல்லாம் துளிர்த்து பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. அதே போல், மக்கள் வாழ்விலும் வசந்தம் வீசி அவர்கள் சீரும் சிறப்பும் நிறைந்தவர்களாக திகழ வேண்டும்.
நாட்டில் அரசியல் ரீதியில் குழப்பகரமான சூழல் மாறி நிலையான ஆட்சி நிலைக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நிறைவான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கருத்து வேற்றுமைகள் களையப்பட்டு போட்டி பொறாமைகள் நீங்கி நாட்டின் நலன் கருதி ஒன்றுபட்டு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டவும், இதய சுத்தியோடு அனைவரும் பாடுபட வேண்டும்.
அந்த வகையில் மலையக மக்கள் பொய்யான போலிப் பிரசாரங்களில் இனிமேலும் ஏமாந்து விடாமல் சுயமாக சிந்தித்து செயற்படவும், திடமான நம்பிக்கையோடு தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்தவும், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் உன்னத நிலையை அடையவும் மலரும் சித்திரைப் புத்தாண்டில் இனிதான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
( மஸ்கெலியா நிருபர் )