மக்களுக்கு நல்வாழ்வை வழங்குவதே நோக்கம்!

0
9

இதுவரை, சுமார் 5 நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன, அவை அனைத்திலும் தரமற்ற நிலக்கரிகளே காணப்பட்டுள்ளன. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தலா 300 மெகாவாட் 3 என்ற அடிப்படையில் அதாவது 900 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டமைந்து காணப்பட்ட போதிலும், இந்த தரமற்ற நிலக்கரி காரணமாக உரிய உற்பத்தித் திறனை எட்ட முடியாது போயுள்ளன. இது தொடர்பான நேரடி தரவுகள் கூட இருப்பதால், துறைசார் மேற்பார்வைக் குழுவில் நான் உரிய தரப்பிடம் கேள்வி எழுப்பியபோது, ​​அவற்றுக்கு அவர்களால் பதில் வழங்க முடியாது போனது. முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, நாட்டிற்கு பக்க பலத்தைப் பெற்றுத் தருவோம் என கூறிக்கொண்டே அரசாங்கம் இவ்வாறு நடந்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெரலிஹெல கிராமத்தில் விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விஜயத்தின் போதே இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பொய்கள் மற்றும் ஏமாற்றுகளை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தனது அரசியலையும் நாட்டுக்கான அபிவிருத்தியையும் முன்னெடுக்காது. மக்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே நோக்கமாகும். இன்று கிடைக்கும் வருமானத்தில் மக்கள் நல்ல வாழ்க்கையை வாழ முடியாது. பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்து, அவர்களின் மாத வருமானம் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் குறைந்துள்ளது. இதனால் வாழக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை இவ்வாறே தொடர்ந்தால், மக்களால் தப்ப முடியாது. பொய்கள் மற்றும் ஏமாற்று மூலம் அரசாங்கத்தை நடத்துவது எப்போதைக்குமே சாத்தியமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 இன்று, விவசாயிகளுக்கு நிலையான விலையும் கிடைக்காது போலும்…

அறுவடை காலம் நெருங்கி வருவதால், ஒரு கிலோ நெல்லுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட விலை கிடைக்கும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றன. ஆனால் இன்று ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.120 வேனும் கிடைக்குமா என்று விவசாயிகள் மிகவும் அச்சத்தில் இருக்கிறது தெரிகிறது. இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலையை அதிகரிக்க தயார் இல்லை. இந்த அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்து கொள்வதற்குத் தேவையான களஞ்சிய வசதிகளைக் கூட தயார் செய்யவில்லை. இந்த சூழ்நிலையில், உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியுமா என்று விவசாயிகள் பயந்துபோயுள்ளனர் .

🟩தற்போது விவசாயிகள் இடைநிலை பயிர்செய்கைகளையும் கூட கைவிட்டுவிட்டுள்ளனர்.

தற்போதைய ஆளும் தரப்பின் அமைச்சர்கள் தேர்தல் காலத்தில் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்குவதாகக் கூறினர். மற்றொரு சந்தர்ப்பத்தில் ஏனைய அனைத்து பயிர்களுக்கும் நிலையான, உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்றும் கூறினர். ஆனால் இவர்கள் அதனைச் செய்தபாடில்லை. துணைப் பயிர்களின் போது கீரை வகைகள் போன்றவற்றை பயிரிட்டாலும், நிலையான விலை கிடைக்காமையினால் விவசாயிகள் இப்போது துணைப் பயிர்செய்கைகளையும் கைவிட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நிலையான விலையை பெற்றுத் தருவோம் என சொன்னவர்கள் இப்போது ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்துள்ளனர்.

நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்குவோம் என்றும், அறுவடைக்கு நிலையான விலையை வழங்குவோம் என்றும் சொன்ன தற்போதைய ஆளும் தரப்பு அரசியல் பிரமுகர்கள், இப்போது பாராளுமன்றத்தில் ஆட்சிக் கதிரைகளில் இருந்து கொண்டு விவசாயிகளை மறந்துபோயுள்ளனர். யானை-மனித மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஹம்பாந்தோட்டைக்கு மாத்திரம் ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தாலும், இதற்கு இன்னும் நிரந்தர தீர்வு இல்லை. மனித வளங்கள், விவசாய செய்கைகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாத்தல், விவசாயத்தை நிலையான முறையில் மேம்படுத்துதல், நிலையான சுற்றுலாத் துறையை வலுப்படுத்துதல் மற்றும் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் இரு சாராரது உயிரையும் பாதுகாக்கும் ஒரு திட்டத்தை நோக்கி நகர்வது அவசியமாகும். 500 மில்லியன் ரூபா பெயரளவில் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறி விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நமது நாட்டிற்கு ஸ்மார்ட் விவசாயக் கொள்கை அவசியம்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தரமற்ற உரமே விவசாயிகள் விரும்பிய அறுவடை கிடைக்காததற்குக் காரணமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக எந்த ஒழுங்குமுறையும் பின்பற்றப்படுவதில்லை. விதைகளின் தரம், விலை, உள்ளீட்டு விலை, உற்பத்தி விலை போன்ற ஒவ்வொரு அம்சத்திலும் விவசாயி ஒரு மாற்றாந்தாய் கவனிப்பையே பெறுகிறான். தரமற்ற பசளைகளைப் பயன்படுத்துவதனால் விவசாயிகளின் அறுவடைகளும் குறைந்து போயுள்ளன. எனவே, நமது நாட்டிற்கு ஸ்மார்ட் விவசாய கொள்கையொன்று அவசியமாக காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிங்கப்பூர் விஜயத்தின் போது, ​​ஒரு வாகன உற்பத்தி நிறுவனத்தைப் பார்வையிட்ட பிறகு, அதில் பெரும்பாலானவை ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே அனைத்தும் செயப்படுகின்றன என்பதை தெரிந்து கொண்டேன். ஸ்மார்ட் விவசாயமும் இந்த தொழிற்சாலைக்குள் கூட செய்யப்படுகின்றன என்பதையும், இந்த செய்கை நடவடிக்கைகள் அனைத்தும் ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன என்பதையும், இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் தொழிலாளர்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நான் நேரில் அறிந்து கொண்டேன்.

🟩 சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசும் நடவடிக்கைகளை செய்வதில் இந்த அரசாங்கம் கெட்டித்தனம் காட்டுகின்றது.

நமது நாட்டிலும் ஸ்மார்ட் விவசாயத்தை முன்னெடுக்க முடியும். விரைவில் அமையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாயத்திற்குத் தேவையான பக்க பலத்தைப் பெற்றுக் கொடுப்போம். அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க தேவையான ஸ்மார்ட் தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் அறிவைப் பெற்றுக் கொடுப்போம். விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் இடத்திற்கு நமது நாட்டைக் கொண்டு வருவோம். நெதர்லாந்து போல விவசாய ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு நமது நாட்டைக் கொண்டு வர வேண்டும். இவை வேடிக்கையான கதைகள் அல்ல, உலகில் ஏற்கனவே நடைமுறையில் முன்னெடுக்கப்படும் வெற்றிகரமான திட்டங்களாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அரசாங்கத்திடம் பொய்களும் ஏமாற்றுகளுமே காணப்படுகின்றன.

நமது நாட்டின் தலைவர்கள் நாட்டை முன்பு இருந்த அதே நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறார்கள். தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, நீர்ப்பாசன முறைகளை புனரமைக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். குளங்ஙகளை புனரமைத்து தருவோம் என்றனர். ஆனால் இன்று எதுவுமே நடந்தபாடில்லை. முறையான நீர்ப்பாசன திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இந்த அரசாங்கம், எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து, இப்போது ஏமாற்றையே முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 இன்று வரை தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த வகுப்புகளும் நடவக்கவில்லை.

தற்போதைய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை சில வாரங்களில் தீர்த்து வைப்போம், தேசிய பாதுகாப்பு குறித்து வகுப்புகளை நடத்துவோம் என்றும் கூறிய எம்.பி.க்களும் அமைச்சர்களும் இருந்தாலும், நேற்று சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் வீதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையையே நாடு அடைந்துள்ளது. இன்று பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே ஒரு கொலை கலாச்சாரம் நடந்து வருகிறது. கொடூரமான கொலை கலாச்சாரம் இன்று நமது சமூகத்தை ஆக்கிரமித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 இன்று நாட்டில் பொய் சொல்லும் சுதந்திரம் மாத்திரமே காணப்படுகின்றன.

இன்று பாதாள உலகக் கும்பல்கள் வீதிகளில் பயமோ இல்லாமல் மக்களைக் கொன்று குவித்து வரும் நிலையை காண்கிறோம். நாட்டில் வாழ்வதற்கான சுதந்திரம் கூட இழக்கப்பட்டுள்ளது. இன்று, நாட்டில் ஒரே ஒரு சுதந்திரம் மாத்திரமே காணப்படுகின்றது. ஆளும் தரப்பு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொய் சொல்லும் சுதந்திரமே அந்த சுதந்திரமாகும். இதற்கு தாராளமாக இடம் காணப்படுகின்றன. இந்த அரசாங்கம் பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் மட்டுமே செய்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here