தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் மக்கள் கவிமணி என்று போற்றப்படுகின்ற இலக்கியவாதியுமான சி.வி. வேலுப்பிள்ளையின் 37ஆவது நினைவு தினம் நாளை 19ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இந்த நினைவு தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப ஒவ்வொரு வருடமும் மக்கள் கவிமணி சி. வி வேலுப்பிள்ளையின் நினைவு தினம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மடக்கும்புர தோட்டத்திலுள்ள சி.வி வேலுப்பிள்ளையின் சமாதியில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதோடு தோட்ட ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெறுவது வழமையாகும்.
அதற்கேற்ப நாளை 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு
மக்கள் கவிமணி சி .வி வேலுப்பிள்ளையின் நினைவு தின நிகழ்வு மடக்கும்புர தோட்டத்தில் உள்ள அன்னாரின் சமாதி வளாகத்தில் இடம் பெற உள்ளது.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி என்பனவற்றை முக்கியஸ்தர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அமைப்பாளர்களும் இணைப்பாளர்களும் மாவட்ட தலைவர்களும் தோட்டத் தலைவர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர் இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
1965 ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான சி.வி வேலுப்பிள்ளை. 1947 இல் சோல்பரி அரசியல் சாசனப்படி இடம்பெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்திலிருந்து சென்ற 7 பேரில் ஒருவராக தலவாக்கலை தொகுதிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, கவிஞர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்தவர். கவிதைகள், நாவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள இவர் 1984 நவம்பர் 19 ஆம் திகதி தனது 70 ஆவது பதில் மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



