மக்கள் செய்தியாளருக்கு மகத்தான விருது!

0
122

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் அபிவிருத்தி சங்க செயலாளராக, பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும், வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் அளப்பரிய சேவையாற்றிய – ஆற்றிக்கொண்டிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமூக சேவருகம், சமாதான நீதவானுமான பா. திருஞானம் பாடசாலை சமூகத்தினரால், விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா, கல்லூி முதல்வர் திரு. எஸ். சந்திரமோகன் தலைமையில், கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று (21.12.2022) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஓர் அம்சமாகவே பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் பா. திருஞானத்தின் சேவையை பாராட்டி கல்லூரி அதிபர், பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும்பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போத்தி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஊடகத்துறையில் வெள்ளிவிழா காணும் பா. திருஞானம், மக்கள் பிரச்சினைகளை சமூகமயப்படுத்தி அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுகொடுப்பதில் முன்னின்று செயற்பட்டவர். அதனால் அவருக்கு ‘மக்கள் செய்தியாளர்’ என்ற நாமமும் சமூகத்தால் வழங்கப்பட்டது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் ஊடக செயலாளராகவும், கல்நடைவள மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, கல்வி இராஜாங்க அமைச்சு , விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றில் ஊடக இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அப்பதவிகளின்போது பாடசாலைக்கு அவர் ஆற்றிய சேவைகள் ஏராளம். கல்வி இராஜாங்க அமைச்சில் ஊடாக இணைப்பாளராக செயற்பட்டபோது – குறுகிய காலப்பகுதிக்குள் பலகோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை பாடசாலைக்கு கொண்டுவந்தவர்.

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரி, புஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் – ஆற்றிக்கொண்டிருப்பவர்.

உயரிய ஊடக விருதான, இலங்கை பத்திரக்கை ஸ்தாபனத்தால் வழங்கப்படும் சுப்பிரமணியம் செட்டியார் சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான விருது – 2011ஆம் ஆண்டு திருஞானத்துக்கு வழங்கப்பட்டது. மேலும் பல விருதுகளையும் வென்று மலையக சமூகத்துக்கு பெருமை சேர்த்தவர்.

பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக ஈராண்டுகள் தொடர முடியும். இருந்தும் அவரின் மகத்தான சேவையை கருதி, கல்லூரி அவரை தொடர்ந்து அப்பதவியில் வைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான ஒருவரை பாராட்டுவதில் எமது கல்லூரி பெருமை அடைகின்றது என பாடசாலை கல்வி சமூகத்தினர் அறிவிப்பு விடுத்தனர்.

பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்னவின் தமிழ் விவகார பொறுப்பாளர் கவாஸ்கர் உட்பட சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜரட்னம் கலந்து சிறப்பித்தார்.

விசேட அதிதியாக கொத்மலை கல்வி வலயத்தின் உதவிக் கல்வி பணிப்பாளரும், புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆர். விஜேந்திரன் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக நிட்டம்புவ கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் பி இளையராஜா (பழைய மாணவர்), மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நிர்வாகப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஐ. ரவிக்குமார் (பழைய மாணவர்), சட்டத்தரணி ஓமர் , ஊடகவியலாளர் ஆர். சனத் (பழைய மாணவர்) ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணகாந்தி அம்மையாரும், கலாநிதி கீர்த்தி ஶ்ரீ தேசமான்ய கிருஷ்ணன் கிருஷ்ணகுமாரும், கீர்த்தி ஶ்ரீ – தேசமான்ய தேவராய பிள்ளை கதிரேசன்யும் கலந்துகொண்டனர்.
Write to

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here