அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு முன்வராத அரசாங்கம் மதுபான சாலைகளைத் திறந்து மக்களை மேலும் அசெளகரித்துக்கு உள்ளாக்கியுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு தொடர்ச்சியாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை.
அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
பால் மா வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதில் பெற்றோர்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் திடீரென்று மதுபான சாலைகளைத் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளை மீறி நீண்ட வரிசையில் இருந்து மது போத்தல்களை வாங்குவதற்கு மதுப் பிரியர்கள் முண்டியடித் தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
அரசாங்கத்தின் இந்தத் திடீர் தீர்மானங்கள் மக்களை மேலும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கப் போகின்றது. ஆகவே அரசாங்கம் மக்கள் நலன்சார்ந்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.