மக்கள் பணத்தை பகிரங்கமாக மேடை போட்டு வீண் செலவு செய்யும் அளவுக்கு இ.தொ.க வளர்ந்து விட்டது

0
98

“மக்கள் பணத்தை பகிரங்கமாக மேடை போட்டு வீண் செலவு செய்யும் அளவுக்கு இ.தொ.க வளர்ந்து விட்டது.” – கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய பொங்கல் விழா தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மேலும் பின்வருமாறு தெரிவித்தார்.

மலையக அரசியலிலே, மக்கள் பணத்தில் கொண்டாட்டம் நடத்துவதும், வீண் விரயம் செய்வதும் புதியதொன்றல்ல. ஆனால், அவை நாள்தோறும் திரை மறைவில் நடந்துகொண்டிருந்தது. இன்று மக்கள் பணத்தை, பகிரங்கமாக, மேடை போட்டு வீண் செலவு செய்யும் அளவுக்கு இ.தொ.க வளர்ந்து விட்டது.

மலையக மக்களின் 200 ஆவது ஆண்டை குறிக்கும் முகமாக, அடையாளப்படுத்தக்கூடிய, எந்த ஒரு செயற்பாடும் செய்யப்படவில்லை. அவர்களது வாழ்வியலில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான ஒரு ஆரம்பமாக, ஒரு அடிக்கல் கூட நட்டு வைப்பதற்கு இன்றைய அரசுக்கு, அமைச்சர்களுக்கு முடியாமல் போனது. ஆனால் மக்கள் பணத்தில், அம் மக்களை அடைமானம் வைத்து, அனுசரணை என்ற பெயரில் பணத்தை சேகரித்து, நாம் 200 என்ற யாருக்கும் பயனற்ற கட்சி கூட்டம் ஒன்றை நடத்தி முடித்தார்கள்.

இப்பொழுது, மீண்டும் மக்கள் பணத்தில், தேசிய பொங்கல் விழா என மலையக மக்களை, தமிழை, மலையக மக்களின் கலாச்சாரத்தை கொச்சை படுத்தும் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர். அதற்க்கு சிறு அளவு அரச நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டதென நியாயம் கூறுகின்றனர். சிறு அளவானாலும், அது மக்கள் பணம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனையவை அனுசரணையில் கிடைத்ததாம். அந்த அனுசரணைகள் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களது பொருளாதார நிலையை, எதிர்கால தேவைகளை முன்காட்டி பெறப்பட்டவை. மொத்தத்தில் அனைத்துமே மக்கள் பணம். இந்த தேசத்தின் பணம். அதனை கேபினட் அமைச்சர் என்பதால், ஒரு நபரின் தேவைக்கோ, ஒரு கட்சியின் தேவைக்கோ எவ்வாறு பயன்படுத்த முடியும்? அது மட்டுமல்லாது, அம் மக்களின் சுய கௌரவத்திற்கு தலை குனிவு வரும் வகையில் எவ்வாறு நிகழ்வு நடத்த முடியும்?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு, அதற்க்கு கூறும் நியாயங்கள் சிறு பிள்ளை தனமாக இருக்கின்றது. காலாகாலமாக மக்கள் பணத்தில், திரை மறைவில் கொண்டாட்டம் நடத்தி குதூகலமாக வாழ்ந்து வந்தவர்கள், இன்று பகிரங்கமாக அதனை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கான பதில் மிக விரைவிலேயே கிடைக்கும் என்பது சமூக வலைதள பதிவுகளில் இருந்து முன்கூட்டியே தெரிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here