மதுபானம் வாங்க சென்ற இருவரில் ஒருவர் சடலமாக மீட்பு – மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

0
246

தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில், அதில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி மோகன்ராஜ் (42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த பாலமாணிக்கம் பிரேம்குமார் (51) என்பவரே காணாமல் போயுள்ளார்.இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும், கடந்த 11 ஆம் திகதி மாலை ஆறு மணியளவில் மதுபானம் வாங்க சென்றனர் எனவும், அவர்கள் திருப்பி வராததால் 12 ஆம் திகதி அவர்களது உறவினர்கள், பொலிஸில் முறையிட்டனர் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இவர்கள் இருவரும் தாம் வசிக்கும் தோட்டத்திலிருந்து மதுபான சாலைக்கு செல்வதற்காக பத்தனை ஆறு ஊடாக உள்ள சிறிய அணையைக் கடக்க முற்பட்ட போது, இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, காணாமல்போனவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here