மதுபான விற்பனைசாலைகள் அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் -ராஜமணி பிரசாத் தெரிவிப்பு

0
192

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான விற்பனைசாலைகள் அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என தெரிவித்த கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் சமூகத்தை சீரழிக்கும் வகையில் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய வியாபார நிலையங்கள் என்னை மீறி அமைக்கப்படுமேயானால் அவ் வியாபார நிலையங்களை தீயிட்டு கொளுத்தி சிறை வாசம் செல்லவும் தயாராகவுள்ளேன் என சூளுரைத்தார்.கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தின் சாமஸ் பிரிவின் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 35 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் 29.11.2018 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தவிசாளர் ராஜமணி பிரசாத், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மலர்வாசகம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது, இவ்வாறு சூளுரைத்த அவர், மேலும் தெரிவித்ததாவது,

மேபீல்ட் தோட்டப்பகுதியில் மதுபான விற்பளை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு வர்த்தகர் ஒருவர் திட்டம் இட்டு வருவதாக இப்பகுதி மக்கள் முன்கூட்டியே என்னிடம் தெரிவித்தனர். அத்தோடு இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கூறினர்.

ஆனால் இதை ஆரம்பித்தில் அறிந்து கொண்ட நான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தேன். இருந்த போதிலும் கொட்டகலை பிரதேச சபை தவிசாளராக பதவியேற்றதன் பின்பு குறித்த வர்த்தகர் தனக்கு 10 கோடி ரூபாய் தருவதாக கூறி மதுபான விற்பனை நிலையத்தை ஆரம்பிப்பதற்காக அனுமதியை கேட்டிருந்தார்.

ஆனால் 100 கோடி ரூபாய் எனக்கு கொடுத்தாலும், ஒருபோதும் நான் அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்ததாக அவர் கூறினார்.

அதே நேரத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களை சமூக சீர்கேடான விடயங்களுக்கு ஒரு காலமும் இடமளிக்கமாட்டேன். நான் கொட்டகலை பிரதேச சபையின் தலைவராக இருக்கும் காலப்பகுதியில் எந்தவொரு தீய செயலுக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் கூறினார்.

கொட்டகலை பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதே எனக்கு இலக்காகும். அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னும், பின்னும் விமர்சனங்கள் எழுமாயின் அந்த விமர்சனங்களை கண்டு நான் ஒரு காலமும் கவலைப்பட போவதில்லை. எனக்கு தேவை மக்களுடைய அபிவிருத்தியே என தெரிவித்த அவர்.

தேர்தல் காலத்தில் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய வீட்டு திட்டங்கள், விளையாட்டு மைதான அபிவிருத்தி, வீதி போக்குவரத்து, குடிநீர் திட்டம் இதன் குறைபாடுகளை தீர்த்து வைப்பேன் என உறுதிபூண்டிருந்தேன்.

அந்தவகையில் மேபீல்ட் தோட்டத்தில் வீட்டு திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகின்றது. குறித்த 5, 6 நாட்களில் இதன் முழுமையான வேலைத்திட்டத்தை எந்தவொரு குறைபாடுகளும் இன்றி பூர்த்தியாக்க நான் பணித்துள்ளேன். குறைகள் இருப்பின் மக்கள் உடனடியாக சுட்டிக்காட்டும் பொழுது அதை நிவரத்திக்கவும் தயாராகவுள்ளேன்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எனது அபிவிருத்தி பணிகளுக்கு பக்க பலமாக இருக்கின்றார். இவரின் பூரண ஒத்துழைப்புடனும், மக்களுடைய ஒத்துழைப்புடனும் எதிர்காலத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை இப்பகுதியில் செய்து முடிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here