சவுதி அரேபியாவின் ஜெட்டா அருகே செங்கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டதாக உலகளாவிய இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவின் பல நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
கேபிள்கள் சேதம் காரணமாக மத்திய கிழக்கு வழியாக நெட்வொர்க் போக்குவரத்து மெதுவாக இருக்கலாம், ஆனால் இது மாற்று வழிகள் மூலம் சரிசெய்யப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பல் நங்கூரமிட்டதாலோ அல்லது திட்டமிட்ட தாக்குதல் காரணமாகவோ கடலுக்கு அடியில் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செயலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் உள்ள கேபிள்கள், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பால் இயக்கப்படுகிறது.
இருப்பினும், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த இடையூறு குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.