மத்திய மலைநாட்டில் கடும் மழை வான் கதவுகள் திறப்பு, மண் திட்டுக்கள் சரிவு, போக்குவரத்து பாதிப்பு.

0
166

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் நேற்று (31) திகதி இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது.இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா ஹட்டன் பொகவந்தலா உள்ளிட்ட பல வீதிகளில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்த இடங்களில் ஒரு வழி போக்குவரத்தே காணப்படுகின்றன. நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகியுள்ள அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றன.

நோட்டன்பிரிஜ் பகுதியில் பெய்து கடும் மழைகாரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கன்தின் நீர் மட்டம் உயர்ந்து வான் பாய்ந்து வருகின்றன.
எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சாரதுறை பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த நீர்த்தேக்கங்களின் நீரினை பயன்படுத்தி உச்ச அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.இதனால் மலைகளுக்கு மண் மேடுகளுக்கும் சமீபமாகவும் மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களில் வாழ்பவர்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே நேரம் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடன் ஹட்டன் கொழும்பு ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் அடிக்கடி பனிமூட்டமும் காணப்படுகின்றன.
குறிப்பாக கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவலை, வட்டவளை, ஹட்டன், குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, ரதல்ல நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் பனிமூட்டம் நிலவுவதாகவும் இதனால் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் பனி மூட்டம் காணப்படும். வேளைகளில் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கினை ஒளிரச் செய்தவாறு பயணிப்பதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாகவும் கடும் குளிர் காரணமாகவும் பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி சற்று வீழ்ச்சி கண்டுள்ளன.
இன்றைய தினம் சீரற்ற காலநிலை காரணமாக தொழிலாளர்களின் வருகையும் மிக குறைவாக காணப்படுவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here